Showing posts with label G Karthikeyan. Show all posts
Showing posts with label G Karthikeyan. Show all posts

Monday, 27 May 2013

Money Laundering article - Nanayam Vikatan

பணச் சலவை – நிலை என்ன?
Posted Date : 11:05 (25/05/2013)Last updated : 11:05 (25/05/2013)
-    ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை

 சமீப காலங்களில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் உங்களது பெயர் மற்றும் முகவரிக்கான அத்தாட்சி இல்லாமல் கணக்கு துவங்க முடியாது என்கிற அளவில் சட்ட நடைமுறைகள் உள்ளன. நீங்கள் அடிக்கடி கேள்விப்படும் வாசகங்களில் ஒன்று “ Money Laundering” என்று சொல்லப்படும் “பணச் சலவை மோசடி” உலக அளவில் அதிக முக்கியத்துவம் பெற்று அதனை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் பெரும்பான்மையான நாடுகள் உள்ளன.  சமீபத்திய ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் உலக மொத்த வருவாயில் (GDP) சுமார் 4% பண சலவை செய்வதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


துணியை அதன் அழுக்கு மற்றும் கறையை நீக்கி சலவை செய்து சுத்தம் செய்வது போல மணி லாண்டரிங் என்பது கறுப்புப்பணம் மற்றும் சட்ட விரோதப் பணத்தின் (Illicit Funds) மீது உள்ள கறையை நீக்கி சட்டப் பூர்வமான பணமாகவோ சொத்தாகவோ மாற்றுவது தான். இது எப்படி நடை பெறுகிறது என்பதைப் பார்ப்போம்.

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல், துப்பாக்கி வியாபாரம், தீவிரவாதம் மூலம் சம்பாதிக்கும் பணம் மற்றும் கறுப்புப்பணத்தை சட்டப் பூர்வமான பணமாக மாற்றுவதில் பெரும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாடும் வித்தியாசமான முறையில் அவற்றை எதிர் கொண்டு ஒடுக்க செயல்பட்டு வருகின்றன.

கறுப்புப்பணத்திற்கும் மற்ற சட்ட விரோத பணத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கறுப்புப்பணம் என்பது சட்டத்திற்க்கு உட்பட்ட தொழிலில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு உரிய வரியை கட்டாமல் சேர்க்கும் பணம். ஆனால், மேலே கூறிய சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் கறுப்புப்பணம் என்றாலும் அதன் மீது உள்ள கறை இரு மடங்கானது. அதாவது வரி ஏய்ப்பு பணமாக இல்லாததோடு குற்றம் புரிந்து சம்பாதித்த பணமாகவும் இருப்பதால் அதன் தீவிர தன்மை மிக அதிகம். ஆகவே இத்தகைய பணத்தை சலவை செய்து அதனை சட்டத்திற்க்கு உட்ப்பட்ட பணமாக புழக்கத்தில் விட தீவிர முயற்சி செய்கின்றனர். பொதுவாக பணச் சலவையை செய்பவர்கள் மூன்று நிலைகளை கடைப்பிடிக்கின்றனர். முதல் நிலையில் ஏதாவது ஒரு வகையில் ரொக்கத்தை சிறு பகுதிகளாகப் பிரித்து பலரது பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். இரண்டாவது நிலையில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை வெளிநாட்டு வங்கிகளுக்கோ அல்லது வரிச் சொர்க்க நாடுகளில் (Tax Haven) உள்ள கம்பெனிகளிலோ முதலீடு செய்யப்படும். மூன்றாவது நிலை என்று சொல்லப்படும் ஒருங்கினைப்பு நிலையில் வெளிநாட்டு வங்கிகளிலிருந்தோ அல்லது கம்பெனிகளிலிருந்தோ மீண்டும் அந்தப்பணம் உள்நாட்டு கம்பெனிக்கு முதலீடாகவோ அல்லது கடனாகவோ கொண்டு வரப்படும்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை
இப்படியாக கறுப்புப்பணம் மீண்டும் இயல்பு நிலை பணமாக மாறி சட்டப் பூர்வமாக சொத்து வாங்கவோ தொழில் துவங்கவோ பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்க்கு வந்து சேரவேண்டிய வரித்தொகை வராதது மட்டுமல்லாமல் மற்ற குற்றமும் தண்டனைக்கு உட்படாமல் தப்பித்து விடுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிக அளவு கறுப்புப்பணம் புழக்கத்தில் இல்லாததால் மற்ற சட்ட விரோத வழிகளில் சம்பாதிக்கும் பணத்தை சட்டப்பணமாக மாற்ற எடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் எதிர் நோக்கும் நிலையில் உள்ளன.   இந்தியாவில் போதை பொருள், துப்பாக்கி வியாபாரம் மற்றும்  தீவிரவாதப்பணம் அதிக அளவில் இல்லாவிட்டாலும் ஊழல் மற்றும் லஞ்சம் சார்ந்த கறுப்புப் பணம் அதிக அளவில் உள்ளது. பொதுவாக இந்தியாவில் கறுப்புப்பணம் ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிக அளவு முதலீடு செய்யப்படுகிறது. அரசியல்வாதிகளும் அதிகார துஷ்பிரயோகிகளும் ஊழல் பணத்தை இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு போக வெளி நாட்டு வங்கிகளிலும் வரி சொர்க்க நாடுகளிலும் முதலீடு செய்கினறன. இதில் ஒரு பகுதி மீண்டும் இந்தியாவில் உள்ள கம்பெனிகளுக்கு ஹெட்ஜ் நிதி (Hedge Funds) மூலம் பங்கு முதலீடாக கொண்டுவரப்படுகிறது.

சமீப காலங்களில் சில அரசியல்வாதிகளது குற்றங்கள் இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளன்ர்.

சமீபத்தில் இந்தியாவில் ஒரு வங்கியின் மூலம் கறுப்புபபணம் அப்பட்டமாக பணச்சலவை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.  வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறேன் பேர் வழி என்ற வகையில் கீழ் கண்ட முறையற்ற விதங்களில் பல வகையான சட்ட மீறல்களை செய்து அதிர்ச்சி அலைகளை பரவ விட்டது இந்த தனியார் வங்கி.

சில பெரிய வாடிக்கையாளர்களுக்கு உதவ ஏராளமான பல பினாமி பெயர்களில் கணக்கு துவங்கியது. பெரும் அளவு ரொக்கத்தை வருமான வரியின் ரேடார் பார்வையில் படாத அளவு சிறு பிரிவுகளாக பிரித்து இந்த கணக்குகளில் செலுத்தி அவற்றை இன்சூரன்ஸ் மற்றும் தங்கங்களில் முதலீடு  செய்ய அனுமதித்தது. பல முறை பல பெயர்களில் கணக்குகளை துவங்க அனுமதித்து அவற்றுள் பல முறை வரைவோலை மற்ற வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தி அதை மற்ற கணக்குகளுக்கு மாற்ற அனுமதித்து அந்த ஆண்டே கணக்கை மூட உதவியது. இதில் வங்கி செய்த முக்கிய தவறு நிரந்தர வருமான வரி கணக்கு எண் (PAN) இல்லாமலும் KYC விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும் கணக்குகளை துவங்க அனுமதித்தது. மேலும் இந்த வங்கி குறிப்பிட்ட வாடிக்கையாள்ர்களுக்கு பெரிய அளவு லாக்கர்களை கொடுத்து ரொக்கமாக வைத்து பல நாட்களில் வங்கி கணக்குகளில் டெபொசிட் செய்ய காரணமாக இருந்தது.

படிவம் 60-ல் பொய்யான தகவல்களை வாடிக்கையாளர்கள் கொடுத்தப்போதும் தெரிந்தும் கண் மூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வெளிநாட்டு வாழ் இந்தியர்களது NRO கணக்கை உபயோகப்படுத்தி வெளிநாட்டிற்க்கு பணத்தை அனுப்பதியதும் அம்பலமாகியுள்ளது. இந்த செய்தி வெளியான உடன் ஏற்ப்பட்ட பரபரப்பு சில தினங்களில் அமுங்கியது. இதற்கான நடவடிக்கை குறித்த சமீபத்திய செய்திகள் எதுவும் இல்லை என்பதை பார்க்கும் போது வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற காரணத்தால் அரசு அடக்கி வாசிக்கிறதோ என்று தோன்றுகிறது.

பல வகைகளில் கறுப்புப்பணம்  பணச் சலவை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுவாக காணப்படுவது ரியல் எஸ்டேட் முதலீடு, திரைப்பட தயாரிப்பு, கம்பெனிகளை நிறுவி கணக்கில் வராத வகையில் செலவு செய்வது ஆகியவை ஆகும்.

பணச்சலவை தடைச்சட்டம் (Prevention of Money Laundry Act) 2002 ஆம் ஆண்டு பாராளாமன்றத்தில் பணச்சலவையை தடை செய்யும் வகையிலும் இதன் மூலம் சேர்த்த சொத்தை அரசு எடுத்து கொள்ளும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியல்வாதிகள், கம்பெனிகள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலமாக பணச்சலவை செய்யப்படுவதை விசாரிக்கும் அமைப்பாக அமலாக்கத்துறையும் (Enforcement Department) மற்றும் வருமான வரித்துறையும் (Income tax Department) செயல்படுகின்றன.  ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இதை கட்டுப்படுத்த பெரிய அளவில் நடவடிக்கை எடுத்ததாக தெரியாவிட்டாலும் இனி வரும் நாட்களில் எடுக்கப்படும் செயல்பாடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


 

Sunday, 6 January 2013

Coimbatore Bond scam - Nanayam Vikatan


வெறும் ஐந்தே ஐந்து பேப்பர் தான். ஆனால், அவற்றின் மதிப்பு சுமார் 27,500 கோடி ரூபாய். இத்தனை பெரிய மதிப்புள்ள பேப்பரை (பாண்டுகளை) நம்மூரில் சாதாரண பீரோவில் பூட்டி வைத்திருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை!  
தமிழகத்தில், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிறு நகரம்தான் தாராபுரம். இங்கு வசித்துவரும் ராமலிங்கத்திடம் தான் இத்தனை மதிப்புள்ள அமெரிக்க டிரஸரி பாண்டுகள் சிக்கி இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒரு பிஸினஸ்மேன் இல்லை;  நிலக்கடலை வியாபாரிதான். பிறகு எப்படி இத்தனை கோடி ரூபாய் மதிப்பு பாண்டுகள் இவரிடம் மாட்டியது?
எப்படி மாட்டினார்?
இந்தப் பாண்டுகளை சென்னையில் இருக்கும் பார்க்ளேஸ் வங்கி மூலம் விற்க முயற்சித்தாராம் ராமலிங்கம். தவிர, 2,500 கோடி ரூபாய்க்கு ஒரே செக்கையும் தந்தாராம். இதைப் பார்த்து அந்த வங்கி அதிகாரிகள் பதறிப் போய், வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் சொல்ல, வருமான வரி அதிகாரிகள் பல காலம் முயற்சித்ததில் ராமலிங்கத்திடம் இந்தப் பாண்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்தார்களாம்.  
யார் இந்த ராமலிங்கம்?
ராமலிங்கத்தின் சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள தொண்டாமுத்தூர்; பரம்பரை வியாபாரக் குடும்பம். வெறும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். கடந்த 94-ம் வருடவாக்கில் நிலக்கடலை வியாபாரம் செய்ய தாராபுரத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் நிலக்கடலை, தேங்காய் என்று பைக்கில் சென்று வியாபாரம் செய்துகொண்டிருந்த இந்த ராமலிங்கத்தின் நடவடிக்கையில் கடந்த சில வருடங்களாக பல மாற்றங்கள். விஸ்தாரமான வீடு, பல லட்சம்  ரூபாய் மதிப்புள்ள உல்லாச கார் என ராஜபோகமாக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 64 நாடு களுக்குப் பலமுறை பயணம் செய்திருக்கிறார்.
பெரிய விஷயமில்லீங்க!
ஒரேநாளில் உலகப் புகழ் பெற்றாலும், அந்தப் பரபரப்புக்கு கொஞ்சம்கூட ஆளாகாமல் தாராபுரம் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டிருந்தார் ராமலிங்கம். 'இதெல்லாம் பெரிய விஷயமில்லீங்க, சாதாரண சமாசாரம்தானுங்க!’ என்பதுபோல நம்மிடம் பேசினார்.
'27,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான அமெரிக்க கடன் பத்திரங்கள் எப்படி  உங்களுக்குக் கிடைத்தது?’ என்று கேட்டோம். ''அது மட்டும் இப்போதைக்குச் சொல்ல மாட்டேன்; விசாரணை முடியட்டும், விலாவாரியாகச் சொல்கிறேன்'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.
''ஒண்ணும் இல்லீங்க, வெறும்(!) ஒண்ணேகால் லட்சம் கோடி ரூபாயில்(!) ஒரு புராஜக்ட் ஆரம்பிக்கப்போறேன்.
அதுக்கு அனுமதி கேட்டு 2,500 கோடி ரூபாய்க்கு ஒரு செக் (ஒரே செக்) தந்தேன். அதை விசாரிக்க வந்திருந்தாங்க. உண்மையைச் சொல்லி இருக்கேன்'' என்று சொல்லி, நம்மை தடதடக்க வைத்தார்.
'ஒண்ணேகால் லட்சம் கோடி ரூபாயில் அப்படி என்ன தொழில் ஆரம்பிக்கப் போறீங்க?’ என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டோம்.
''ஓ, அதுங்களா... ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி யில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை பல நூறு ஏக்கரில் அமைக்கப்போறேன். பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மாதிரியான முக்கிய தொழில் அது. இந்தியாவில் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்களுக்கு அடுத்து இதைச் செய்யும் தனியார் கம்பெனி நாங்களாகத்தான் இருப்போம்'' என்றவரிடம், 'நீங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் போறீங்களே, உங்க பின்னணியில் அரசியல் கட்சிகள் ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டோம்.
''இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அடிக்கடி போய்வருவது உண்மைதான். இன்றைய தேதியில் வெளிநாடு போய் வருவதெல்லாம் சாதாரண விஷயம். கச்சா எண்ணெய் தொழில் சம்பந்தமான ஆலோசனை பெறவும், முதலீட்டாளர்கள் மீட்டிங்கில் கலந்துகொள்ளவும்தான் போய் வருகிறேன். எனக்குப் பின்னால் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருப்பது என்பதெல்லாம் பொய். சென்னை விசாரணை முடிந்தபின்பு என்னை சந்திங்க, இன்னும் பேசலாம்'' என்று முடித்துக்கொண்டார் ராமலிங்கம்.
இதுகுறித்து வருமான வரித் துறையில் வலம் வந்தபோது, இந்த பாண்டு உண்மையானதுதானா,   இவருடைய பின்னணி என்ன, இவர் பினாமியாக இருப்பாரா என்கிற ரீதியில் விசாரிக்கிறார்களாம்.  
இதற்கிடையில் இவ்வளவு அதிக தொகைக்கு (ஒரு பில்லியன் டாலருக்கு) அமெரிக்க அரசு பாண்டுகளை வெளியிடவே இல்லை என்று சொன்ன அமெரிக்க அரசு அதிகாரிகள், கடந்த பிப்ரவரியில் இதேபோல 6 பில்லியன் டாலர் மதிப்பிலான போலி பாண்டுகளை இத்தாலியில் கண்டுபிடித்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தப் பாண்டுகளும் போலியாகவே இருக்கும் என்று ஃபைலை குளோஸ் பண்ண விசாரணை அதிகாரிகள் தயாராக இல்லை. ''ராமலிங்கம் ஒன்றும் 'டம்மி பீஸ்’ கிடையாது. அவரிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது'' என்று சொல்லும் அவர்கள், இந்த வழக்கு சி.பி.ஐ. அல்லது Serious Fraud Investigation Office-தான் விசாரிக்கும் என்றார்கள்.
தமிழகத்தில் வருமான வரிச் சோதனையில் அதிகபட்சமாக சிக்கிய தொகை சுமார் 120 கோடிதான். ஆனால், இப்போது 28,000 கோடி ரூபாய் அளவுக்கு சிக்கி இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்கிறது வருமான வரித் துறை. கூடவே, பல கேள்விகளையும் எழுப்புகிறது.
ராமலிங்கம் என்ற தனிநபரிடம் மட்டும் இவ்வளவு தொகை இருக்கிறது என்றால், இவரைப் போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு, இந்த பத்திரம் உண்மையானது என்றால், இவருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது, இவருக்குப் பின்னால் இருக்கும் நபர்கள் யார்? ஒருவேளை போலியானது எனில் எந்த நாட்டிலிருந்து இதைக் கொண்டு வந்தார்... இப்படி பல கேள்விகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
பாசி முதல் முதல் ஈமு வரை அனைத்து மோசடிகளைப் போல கொங்கு மண்டலம் இந்த சம்பவத்தையும் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

Savings scheme options in India


உலக அளவில் ஆசிய நாடுகளில்தான் சேமிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில்தான் 'சிறு சேமிப்பு’ என்கிற வழக்கம் அதிக மக்களிடம் இருக்கிறது.  ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சம்பாதிப்பதை எல்லாம் செலவழிக்கிற வழக்கமே அதிகமாக இருக்கிறது.
சேமிக்கிற பழக்கத்தை நம் மக்களிடம் உற்சாகப்படுத்தி உயர்த்துகிற மாதிரி நமது அரசாங்கமும் சேமிப்புக்கு பல்வேறு வகையில் வருமான வரி விலக்கு அளித்து வருகிறது. இந்திய வருமான வரிச் சட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு எக்ஸ்ட்ராவாக சில வரிச் சலுகைகள் இருந்தாலும், வயது வேறுபாடுகளுக்கு சலுகைகளில் மாற்றம் இல்லை.
சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவோர் தமது வயது, நீண்டகாலத் தேவை மற்றும் அதற்கான வருமான வரிச் சலுகைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்வது அவசியம். உதாரணமாக, வயது வரம்பை 25 முதல் 35, 36 முதல் 45 மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோர் என்ற அடிப்படையில் காண்போம்.
வயது 25 முதல் 35..!
சம்பாதிக்க ஆரம்பிக்கும் இந்த இளம் பருவத்தில் 'சேமிப்பு’ என்கிற சொல்லுக்கே அர்த்தம் புரியாதவராகப் பெரும்பான்மையினர் தாராளமாகச் செலவு செய்யும் மனப்பான்மையில் இருப்பார்கள். இந்தத் தருணத்தில் கீழ்க்கண்ட வருமான வரி சேமிப்பு மற்றும் சேமிப்புகளில் ஈடுபடலாம்.
நிறுவனப் பங்குகள்:
தற்போதைய காலகட்டத்தில் பங்குகளில் முதலீடு செய்வதைப் பெரும்பாலோர் அதிக ரிஸ்க் என்று கருதினாலும் மிகக் குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டித் தருவதால் அதில் முதலீடு செய்யவும் எண்ணுகிறார்கள். மேலும், பாதுகாப்பான முறையில் பங்குகளில் முதலீடு செய்யவே அதிகம் விரும்புகிறார்கள்.
புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டத்தில், புதிதாக பங்கில் முதலீடு செய்பவர், 50,000 ரூபாய் முதலீடு செய்தால் இதில் 50 சதவிகிதத் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும். மேலும், இந்தப் பங்கு மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி கிடையாது. ஓராண்டுக்கு மேல் வைத்திருந்து விற்கும்போது ஆதாயத்துக்கு வரி கட்டவேண்டியிருக்காது. இந்த வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. பி.எஸ்.இ.100, சி.என்.எக்ஸ்.100,
பங்குச் சார்ந்த இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யலாம்.  
வீட்டுக் கடன்:
வீடு என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும், முக்கிய இலக்காகவும் இருந்து வருகிறது. இந்தக் கனவை நனவாக்க இந்த இளம் வயது பருவம் மிகவும் உகந்தது. இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்கினால் ஓய்வு பெறுவதற்கு முன் முழுக் கடனை அடைப்பதோடு மட்டுமல்லாமல், வருமான வரி விலக்குகளிலும் சலுகை பெறலாம்.
சொந்த உபயோகத்திற்கான வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை ஓராண்டில் வரிச் சலுகை கிடைக்கும். மேலும், திரும்பச் செலுத்தும் அசலில் 80சி-ன் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும்.
வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அசலுக்கு 80சி-ன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்; அதேநேரத்தில், முழு வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு.
நீண்டகாலத்தில் வீட்டின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்பதால் வரிச் சலுகை மற்றும் சொத்து சேருவது கூடுதல் லாபகரமாக இருக்கும்.
வருங்கால வைப்பு நிதித் திட்டம்:
தபால் நிலையம் அல்லது ஸ்டேட் பேங்க் மூலமாகச் சேமிக்கப்படும் வருங்கால வைப்பு  நிதித் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வருமான வரிச் சட்டம் 80சி-ல் விலக்கு பெறமுடியும்.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று, இதிலிருந்து கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி எப்போதும் செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டு திட்டமான இதில் கடன் வசதியும் உண்டு என்பது இதன் சிறப்பு அம்சம்.
35 வயது - 45 வயது வரை..!
இந்த வயதில் ஓய்வுக்காலத்திற்கென சேமிக்கத் தொடங்குவது, குழந்தைகள் கல்லூரி/திருமணத்திற்கான முதலீட்டை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த வயதில் வருமானம் அதிகமாகும். அதேநேரத்தில், படிப்பு செலவு, பெற்றோருக்கான மருத்துவச் செலவு போன்ற செலவுகளும் கூடுதலாகும். இந்த வயதில் வரிச் சலுகைக்காக வீட்டுக் கடன் வாங்கினால் இதர செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கும் என்பதால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும்.
உங்கள் மற்றும் உங்களின் பெற்றோருக்கு கூடுதல் தொகைக்கு மெடிக்ளைம் பாலிசி எடுக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு ஓராண்டில் கட்டும் பிரீமியத்தில் 15,000 ரூபாய் வரைக்கும், பெற்றோர்களுக்குத் தனியாக 15,000 ரூபாய் வரைக்கும் (சீனியர் சிட்டிசன் என்கிறபோது 20,000 ரூபாய்) வரிச் சலுகை உண்டு.
வரிச் சலுகை அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில், டிவிடெண்ட் மற்றும் மூன்றாண்டு கழித்து முதலீட்டை திரும்ப எடுக்கும்போது ஆதாயத்துக்கு வரி எதுவும் கட்டவேண்டி இருக்காது.
45 வயதுக்கு மேல்..!
பொதுவாக 45 வயதிற்கு மேல் வரிச் சலுகைக்காகச் செய்யப்படும் முதலீடுகளை திரும்ப எடுக்கும் காலம்  மூன்று முதல் ஐந்தாண்டுக்குள் எடுப்பதுபோல் பார்த்துக்கொண்டால் நல்லது. மேலும், வரிச் சலுகைக்காக ஆரம்பிக்கும் எந்த விஷயமும் இந்தக் காலகெடுவுக்குள் முடியும்படி பார்த்துக்கொள்வது நல்லது. அந்த வகையில்
15, 20 ஆண்டுகள் இ.எம்.ஐ. கட்டும் வீட்டுக் கடனை இந்த வயதில் வாங்குவது நல்லதல்ல.
வரிச் சேமிப்புக்காக வாலன்டரி பி.எஃப்., ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (வட்டிக்கு வரி உண்டு) என்பதுபோன்ற ரிஸ்க் இல்லாதத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் வரிச் சேமிப்பு முதலீடு ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகவும் அமைய வேண்டும். அதிக 'ரிஸ்க்’ இல்லாமல் இருக்கக்கூடிய முதலீடுகளில் ஈடுபடுவது மிக, மிக முக்கியம்.
இந்தக் காலகட்டத்தில் வரிச் சேமிப்புக்காக பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களை தவிர்ப்பது நல்லது. ரிஸ்க் கொண்ட பங்குச் சந்தை சார்ந்த திட்டத்தின் மூலம் பண அளவில் அல்லது மன அளவில் அதிகம் பாதித்து உடல் நலனை கெடுத்துக்கொள்ள வேண்டாம். இது பல தருணங்களில் கண்ட உண்மை.
வரிச் சலுகைக்காகச் செய்யப்படும் முதலீடு என்றாலும் பாதுகாப்பாக உங்கள் வயதுக்கு ஏற்றதைத் தேர்வு செய்யுங்கள்..!
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வரிச் சலுகைகள் யாவும் தற்போது அமலில் இருக்கும் வருமான வரிச் சட்டத்தின் படியாகும். இதுவே புதிய வடிவத்தில் வெளிவர இருக்கும் நேரடி வரி சட்டத்தில் (Direct Tax Code) பல மாற்றங்கள் இருக்கலாம்.

Sunday, 30 December 2012

How to bring back black money stashed offshore to India?


கறுப்புப் பணம்.. பொது மன்னிப்புதான் தீர்வு!


இந்தியாவிலிருந்து இதுவரை வெளியேறிய கறுப்புப் பணத்தின் அளவு பல லட்சம் கோடி ரூபாய் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
கிட்டத்தட்ட 150 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்திய நியூயார்க்கைச் சேர்ந்த குளோபல் ஃபைனான்ஷியல் இன்டெக்ரிட்டி, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இதுவரை வெளியேறிய கறுப்புப் பணம் எவ்வளவு என்கிற புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த ரிப்போர்ட்படி, 2010-ல் மட்டும் ரூ.8,720 கோடி கறுப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறதாம். 1947 முதல் 2010-ம் ஆண்டுவரை மொத்தமாக சுமார் ரூ.12,64,400 கோடி (232 பில்லியன் டாலர்)  கறுப்புப் பணம் வெளிநாடு களுக்குப் போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறது.
வெளிநாடுகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலில் சீனா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள நிலையில் இந்தியா எட்டாம் இடத்தில் உள்ளது. அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் பெறும் லஞ்சம் மற்றும் ஊழல் பணம், சில பெரும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்து சேர்க்கும் பணம் போன்றவைதான் கறுப்புப் பணமாக  வெளிநாட்டு வங்கிகளில் தஞ்சம் அடைகிறது. எதிர்காலத்தில் அரசியல் மற்றும் வியாபாரத் தேவைக்கு பயன்படும் என்கிற நோக்கத்தில்தான் இந்தப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளுக்குக் கொண்டுபோய் பதுக்கி வைக்கிறார்கள். ஆனால் இந்த பணம், பல சமயங்களில் எடுக்கப்படாமல், யாருக்கும் பயன்படாமல் போய்விடுவது கொடுமையான விஷயம். இந்தப் பணத்தை இந்தியாவுக்கு சரியாக கொண்டுவர முடியும்பட்சத்தில் மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற பல முக்கியத் திட்டங்களுக்கு அதிக அளவில் செலவுசெய்ய முடியும்.  
மீட்பது சாத்தியமா?
வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்பது இரண்டு விதங்களில் சாத்தியப்படலாம். ஒன்று, தீவிர அரசாங்க நடவடிக்கை மூலம் பிற நாடுகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு மீட்க முயற்சி செய்வது.  இரண்டாவது, பணத்தைக் கொண்டு சென்றவர் தாமாகவே முன்வந்து இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டுவர வாய்ப்பு அளிப்பது.
இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் மூன்றுமுறை 'தாமாக முன்வந்து வரிச் செலுத்தும்திட்டங்களை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியது. கடைசியாக 1997-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் Voluntary Disclosure of Income Scheme (VDIS) சுமார் 3,50,000 வரிதாரர்கள் கிட்டத்தட்ட ரூ.7,800 கோடி கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வந்து அதற்கான வரியைச் செலுத்தினார்கள்.  
இவை அனைத்தும் உள்நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர அறிவிக்கப்பட்ட திட்டங்கள். இதுவரை வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவர எந்த திட்டமும் போடப்படவில்லை. ஆனால், வெளிநாடுகளில் இது மாதிரியான முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஜெர்மனியானது, வெளிநாட்டில் ஏதும் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ வைத்திருந்தால் அவற்றுக்கான வரி கட்டி, சிறைத் தண்டனையிலிருந்து விடுபடும் திட்டத்தை அறிவித்தது. ஜெர்மனியைத் தொடர்ந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல், கிரீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இத்தகையத் திட்டத்தை அறிமுகம் செய்து கணிசமான வரிப்பணம் வசூலித்தன.

குறிப்பாக, அமெரிக்கா இத்திட்டத்தை எப்படி செயல்படுத்தியது என்று பார்ப்போம். அமெரிக்க பிரஜை  ஒருவர், வெளி நாட்டில் தன் மீதோ அல்லது தன் கையப்பத்தில் செயல்படுத்தப்படும் வங்கிக் கணக்கிலோ அல்லது நிதிச் சொத்தாகவோ 10,000 டாலருக்கு அதிகமாக வைத்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ம் தேதிக்கு முன்பு திஙிகிஸி படிவம் தாக்கல் செய்வது அவசியம். இதை செய்யத் தவறினாலோ, வெளிநாட்டு வருமானம் அல்லது சொத்துக்களை அறிவிக்காமல்விட்டாலோ அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
அமெரிக்காவில் ஒபாமா பதவியேற்றபின் 2009 மற்றும் 2011 ஆண்டுகளில் OVDI (Offshore Voluntary Disclosure Initiative), OVDP (Offshore Voluntary Disclosure Programme)  என்னும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்த 'பொது மன்னிப்புத் திட்டத்தில்’  (Amnesty)  தாமாக முன்வந்து இதுவரை கணக்கில் காண்பிக்காதச் சொத்துக்களை காட்டி, வரி மற்றும் வட்டி செலுத்தும்பட்சத்தில் அமெரிக்க வருமானவரித்துறை (IRS)அதிகபட்ச அபராதமாக சொத்து மதிப்பில் 25 சதவிகிதத்தை விதித்து, சிறைத்தண்டனை ஏதும் இல்லாமல் மன்னித்து விட்டுவிடுவது இத்திட்டங்களின் அனுகூலம்.
இத்திட்டங்கள் வந்தபிறகு சுமார் 33,000 பேர் கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர் அளவிற்கு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தினார்கள். மேலும், இத்திட்டத்தை மூன்றாவது முறையாகத் தொடர்ந்து இந்த ஆண்டு அமெரிக்க அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தி இருப்பதைப் பார்க்கும்போது இதன் முக்கியத்துவத்தையும் வெற்றியையும் புரிந்துகொள்ளலாம். இத்திட்டங்களில் கிரிமினல் சட்டத்திற்குப் புறம்பான வருமானம் அதாவது, துப்பாக்கி வியாபாரம், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றுக்கு மன்னிப்பு வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முடியுமா?
2012 பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள வரிதாரர்கள் வெளிநாட்டில் உள்ள சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருமானம் குறித்து விவரம் தெரிவிக்கவேண்டும் என சொல்லப் பட்டாலும், அதனால் பெரிய மாற்றம் ஏதும் வந்துவிடவில்லை.
கறுப்புப் பண பதுக்கல் பேர்வழிகள், வெளிநாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவந்து அதற்கான வரி மற்றும் அபராதம் செலுத்த பொது மன்னிப்பு வழங்கலாம். உதாரணமாக, 70 சதவிகித வரி கட்டினால் போதும், சிறைத் தண்டனை எதுவும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் பலரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட கறுப்புப் பணம் மீண்டும் இந்திய மண்ணுக்குள் வரும் வாய்ப்பு உருவாகும்.
இப்படி ஒரு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தால், பலரும் குறை சொல்வார்கள்; விமர்சனம் செய்வார்கள்.
ஆனாலும், அது பற்றி கவலைப்படாமல் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம் சில லட்சம் கோடிகளாவது நமக்குக் கிடைக்கலாம். அதனைக்கொண்டு நம் நாட்டின் அடிப்படைத் தேவைகள் பலவற்றை நிறைவேற்ற முயற்சிக்கலாமே!