Monday, 27 May 2013

Money Laundering article - Nanayam Vikatan

பணச் சலவை – நிலை என்ன?
Posted Date : 11:05 (25/05/2013)Last updated : 11:05 (25/05/2013)
-    ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை

 சமீப காலங்களில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் உங்களது பெயர் மற்றும் முகவரிக்கான அத்தாட்சி இல்லாமல் கணக்கு துவங்க முடியாது என்கிற அளவில் சட்ட நடைமுறைகள் உள்ளன. நீங்கள் அடிக்கடி கேள்விப்படும் வாசகங்களில் ஒன்று “ Money Laundering” என்று சொல்லப்படும் “பணச் சலவை மோசடி” உலக அளவில் அதிக முக்கியத்துவம் பெற்று அதனை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் பெரும்பான்மையான நாடுகள் உள்ளன.  சமீபத்திய ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் உலக மொத்த வருவாயில் (GDP) சுமார் 4% பண சலவை செய்வதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


துணியை அதன் அழுக்கு மற்றும் கறையை நீக்கி சலவை செய்து சுத்தம் செய்வது போல மணி லாண்டரிங் என்பது கறுப்புப்பணம் மற்றும் சட்ட விரோதப் பணத்தின் (Illicit Funds) மீது உள்ள கறையை நீக்கி சட்டப் பூர்வமான பணமாகவோ சொத்தாகவோ மாற்றுவது தான். இது எப்படி நடை பெறுகிறது என்பதைப் பார்ப்போம்.

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல், துப்பாக்கி வியாபாரம், தீவிரவாதம் மூலம் சம்பாதிக்கும் பணம் மற்றும் கறுப்புப்பணத்தை சட்டப் பூர்வமான பணமாக மாற்றுவதில் பெரும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாடும் வித்தியாசமான முறையில் அவற்றை எதிர் கொண்டு ஒடுக்க செயல்பட்டு வருகின்றன.

கறுப்புப்பணத்திற்கும் மற்ற சட்ட விரோத பணத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கறுப்புப்பணம் என்பது சட்டத்திற்க்கு உட்பட்ட தொழிலில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு உரிய வரியை கட்டாமல் சேர்க்கும் பணம். ஆனால், மேலே கூறிய சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் கறுப்புப்பணம் என்றாலும் அதன் மீது உள்ள கறை இரு மடங்கானது. அதாவது வரி ஏய்ப்பு பணமாக இல்லாததோடு குற்றம் புரிந்து சம்பாதித்த பணமாகவும் இருப்பதால் அதன் தீவிர தன்மை மிக அதிகம். ஆகவே இத்தகைய பணத்தை சலவை செய்து அதனை சட்டத்திற்க்கு உட்ப்பட்ட பணமாக புழக்கத்தில் விட தீவிர முயற்சி செய்கின்றனர். பொதுவாக பணச் சலவையை செய்பவர்கள் மூன்று நிலைகளை கடைப்பிடிக்கின்றனர். முதல் நிலையில் ஏதாவது ஒரு வகையில் ரொக்கத்தை சிறு பகுதிகளாகப் பிரித்து பலரது பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். இரண்டாவது நிலையில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை வெளிநாட்டு வங்கிகளுக்கோ அல்லது வரிச் சொர்க்க நாடுகளில் (Tax Haven) உள்ள கம்பெனிகளிலோ முதலீடு செய்யப்படும். மூன்றாவது நிலை என்று சொல்லப்படும் ஒருங்கினைப்பு நிலையில் வெளிநாட்டு வங்கிகளிலிருந்தோ அல்லது கம்பெனிகளிலிருந்தோ மீண்டும் அந்தப்பணம் உள்நாட்டு கம்பெனிக்கு முதலீடாகவோ அல்லது கடனாகவோ கொண்டு வரப்படும்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை
இப்படியாக கறுப்புப்பணம் மீண்டும் இயல்பு நிலை பணமாக மாறி சட்டப் பூர்வமாக சொத்து வாங்கவோ தொழில் துவங்கவோ பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்க்கு வந்து சேரவேண்டிய வரித்தொகை வராதது மட்டுமல்லாமல் மற்ற குற்றமும் தண்டனைக்கு உட்படாமல் தப்பித்து விடுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிக அளவு கறுப்புப்பணம் புழக்கத்தில் இல்லாததால் மற்ற சட்ட விரோத வழிகளில் சம்பாதிக்கும் பணத்தை சட்டப்பணமாக மாற்ற எடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் எதிர் நோக்கும் நிலையில் உள்ளன.   இந்தியாவில் போதை பொருள், துப்பாக்கி வியாபாரம் மற்றும்  தீவிரவாதப்பணம் அதிக அளவில் இல்லாவிட்டாலும் ஊழல் மற்றும் லஞ்சம் சார்ந்த கறுப்புப் பணம் அதிக அளவில் உள்ளது. பொதுவாக இந்தியாவில் கறுப்புப்பணம் ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிக அளவு முதலீடு செய்யப்படுகிறது. அரசியல்வாதிகளும் அதிகார துஷ்பிரயோகிகளும் ஊழல் பணத்தை இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு போக வெளி நாட்டு வங்கிகளிலும் வரி சொர்க்க நாடுகளிலும் முதலீடு செய்கினறன. இதில் ஒரு பகுதி மீண்டும் இந்தியாவில் உள்ள கம்பெனிகளுக்கு ஹெட்ஜ் நிதி (Hedge Funds) மூலம் பங்கு முதலீடாக கொண்டுவரப்படுகிறது.

சமீப காலங்களில் சில அரசியல்வாதிகளது குற்றங்கள் இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளன்ர்.

சமீபத்தில் இந்தியாவில் ஒரு வங்கியின் மூலம் கறுப்புபபணம் அப்பட்டமாக பணச்சலவை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.  வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறேன் பேர் வழி என்ற வகையில் கீழ் கண்ட முறையற்ற விதங்களில் பல வகையான சட்ட மீறல்களை செய்து அதிர்ச்சி அலைகளை பரவ விட்டது இந்த தனியார் வங்கி.

சில பெரிய வாடிக்கையாளர்களுக்கு உதவ ஏராளமான பல பினாமி பெயர்களில் கணக்கு துவங்கியது. பெரும் அளவு ரொக்கத்தை வருமான வரியின் ரேடார் பார்வையில் படாத அளவு சிறு பிரிவுகளாக பிரித்து இந்த கணக்குகளில் செலுத்தி அவற்றை இன்சூரன்ஸ் மற்றும் தங்கங்களில் முதலீடு  செய்ய அனுமதித்தது. பல முறை பல பெயர்களில் கணக்குகளை துவங்க அனுமதித்து அவற்றுள் பல முறை வரைவோலை மற்ற வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தி அதை மற்ற கணக்குகளுக்கு மாற்ற அனுமதித்து அந்த ஆண்டே கணக்கை மூட உதவியது. இதில் வங்கி செய்த முக்கிய தவறு நிரந்தர வருமான வரி கணக்கு எண் (PAN) இல்லாமலும் KYC விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும் கணக்குகளை துவங்க அனுமதித்தது. மேலும் இந்த வங்கி குறிப்பிட்ட வாடிக்கையாள்ர்களுக்கு பெரிய அளவு லாக்கர்களை கொடுத்து ரொக்கமாக வைத்து பல நாட்களில் வங்கி கணக்குகளில் டெபொசிட் செய்ய காரணமாக இருந்தது.

படிவம் 60-ல் பொய்யான தகவல்களை வாடிக்கையாளர்கள் கொடுத்தப்போதும் தெரிந்தும் கண் மூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வெளிநாட்டு வாழ் இந்தியர்களது NRO கணக்கை உபயோகப்படுத்தி வெளிநாட்டிற்க்கு பணத்தை அனுப்பதியதும் அம்பலமாகியுள்ளது. இந்த செய்தி வெளியான உடன் ஏற்ப்பட்ட பரபரப்பு சில தினங்களில் அமுங்கியது. இதற்கான நடவடிக்கை குறித்த சமீபத்திய செய்திகள் எதுவும் இல்லை என்பதை பார்க்கும் போது வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்ற காரணத்தால் அரசு அடக்கி வாசிக்கிறதோ என்று தோன்றுகிறது.

பல வகைகளில் கறுப்புப்பணம்  பணச் சலவை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுவாக காணப்படுவது ரியல் எஸ்டேட் முதலீடு, திரைப்பட தயாரிப்பு, கம்பெனிகளை நிறுவி கணக்கில் வராத வகையில் செலவு செய்வது ஆகியவை ஆகும்.

பணச்சலவை தடைச்சட்டம் (Prevention of Money Laundry Act) 2002 ஆம் ஆண்டு பாராளாமன்றத்தில் பணச்சலவையை தடை செய்யும் வகையிலும் இதன் மூலம் சேர்த்த சொத்தை அரசு எடுத்து கொள்ளும் வகையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசியல்வாதிகள், கம்பெனிகள் மற்றும் பங்குச் சந்தைகள் மூலமாக பணச்சலவை செய்யப்படுவதை விசாரிக்கும் அமைப்பாக அமலாக்கத்துறையும் (Enforcement Department) மற்றும் வருமான வரித்துறையும் (Income tax Department) செயல்படுகின்றன.  ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இதை கட்டுப்படுத்த பெரிய அளவில் நடவடிக்கை எடுத்ததாக தெரியாவிட்டாலும் இனி வரும் நாட்களில் எடுக்கப்படும் செயல்பாடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


 

No comments:

Post a comment