Sunday, 6 January 2013

Savings scheme options in India


உலக அளவில் ஆசிய நாடுகளில்தான் சேமிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில்தான் 'சிறு சேமிப்பு’ என்கிற வழக்கம் அதிக மக்களிடம் இருக்கிறது.  ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சம்பாதிப்பதை எல்லாம் செலவழிக்கிற வழக்கமே அதிகமாக இருக்கிறது.
சேமிக்கிற பழக்கத்தை நம் மக்களிடம் உற்சாகப்படுத்தி உயர்த்துகிற மாதிரி நமது அரசாங்கமும் சேமிப்புக்கு பல்வேறு வகையில் வருமான வரி விலக்கு அளித்து வருகிறது. இந்திய வருமான வரிச் சட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு எக்ஸ்ட்ராவாக சில வரிச் சலுகைகள் இருந்தாலும், வயது வேறுபாடுகளுக்கு சலுகைகளில் மாற்றம் இல்லை.
சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவோர் தமது வயது, நீண்டகாலத் தேவை மற்றும் அதற்கான வருமான வரிச் சலுகைகள் ஆகியவற்றைக் கருத்தில்கொள்வது அவசியம். உதாரணமாக, வயது வரம்பை 25 முதல் 35, 36 முதல் 45 மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டோர் என்ற அடிப்படையில் காண்போம்.
வயது 25 முதல் 35..!
சம்பாதிக்க ஆரம்பிக்கும் இந்த இளம் பருவத்தில் 'சேமிப்பு’ என்கிற சொல்லுக்கே அர்த்தம் புரியாதவராகப் பெரும்பான்மையினர் தாராளமாகச் செலவு செய்யும் மனப்பான்மையில் இருப்பார்கள். இந்தத் தருணத்தில் கீழ்க்கண்ட வருமான வரி சேமிப்பு மற்றும் சேமிப்புகளில் ஈடுபடலாம்.
நிறுவனப் பங்குகள்:
தற்போதைய காலகட்டத்தில் பங்குகளில் முதலீடு செய்வதைப் பெரும்பாலோர் அதிக ரிஸ்க் என்று கருதினாலும் மிகக் குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டித் தருவதால் அதில் முதலீடு செய்யவும் எண்ணுகிறார்கள். மேலும், பாதுகாப்பான முறையில் பங்குகளில் முதலீடு செய்யவே அதிகம் விரும்புகிறார்கள்.
புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டத்தில், புதிதாக பங்கில் முதலீடு செய்பவர், 50,000 ரூபாய் முதலீடு செய்தால் இதில் 50 சதவிகிதத் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும். மேலும், இந்தப் பங்கு மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி கிடையாது. ஓராண்டுக்கு மேல் வைத்திருந்து விற்கும்போது ஆதாயத்துக்கு வரி கட்டவேண்டியிருக்காது. இந்த வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. பி.எஸ்.இ.100, சி.என்.எக்ஸ்.100,
பங்குச் சார்ந்த இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யலாம்.  
வீட்டுக் கடன்:
வீடு என்பது ஒவ்வொருவருடைய கனவாகவும், முக்கிய இலக்காகவும் இருந்து வருகிறது. இந்தக் கனவை நனவாக்க இந்த இளம் வயது பருவம் மிகவும் உகந்தது. இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்கினால் ஓய்வு பெறுவதற்கு முன் முழுக் கடனை அடைப்பதோடு மட்டுமல்லாமல், வருமான வரி விலக்குகளிலும் சலுகை பெறலாம்.
சொந்த உபயோகத்திற்கான வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை ஓராண்டில் வரிச் சலுகை கிடைக்கும். மேலும், திரும்பச் செலுத்தும் அசலில் 80சி-ன் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு லட்ச ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும்.
வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அசலுக்கு 80சி-ன் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்; அதேநேரத்தில், முழு வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு.
நீண்டகாலத்தில் வீட்டின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்பதால் வரிச் சலுகை மற்றும் சொத்து சேருவது கூடுதல் லாபகரமாக இருக்கும்.
வருங்கால வைப்பு நிதித் திட்டம்:
தபால் நிலையம் அல்லது ஸ்டேட் பேங்க் மூலமாகச் சேமிக்கப்படும் வருங்கால வைப்பு  நிதித் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வருமான வரிச் சட்டம் 80சி-ல் விலக்கு பெறமுடியும்.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று, இதிலிருந்து கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரி எப்போதும் செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டு திட்டமான இதில் கடன் வசதியும் உண்டு என்பது இதன் சிறப்பு அம்சம்.
35 வயது - 45 வயது வரை..!
இந்த வயதில் ஓய்வுக்காலத்திற்கென சேமிக்கத் தொடங்குவது, குழந்தைகள் கல்லூரி/திருமணத்திற்கான முதலீட்டை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த வயதில் வருமானம் அதிகமாகும். அதேநேரத்தில், படிப்பு செலவு, பெற்றோருக்கான மருத்துவச் செலவு போன்ற செலவுகளும் கூடுதலாகும். இந்த வயதில் வரிச் சலுகைக்காக வீட்டுக் கடன் வாங்கினால் இதர செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கும் என்பதால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும்.
உங்கள் மற்றும் உங்களின் பெற்றோருக்கு கூடுதல் தொகைக்கு மெடிக்ளைம் பாலிசி எடுக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கு ஓராண்டில் கட்டும் பிரீமியத்தில் 15,000 ரூபாய் வரைக்கும், பெற்றோர்களுக்குத் தனியாக 15,000 ரூபாய் வரைக்கும் (சீனியர் சிட்டிசன் என்கிறபோது 20,000 ரூபாய்) வரிச் சலுகை உண்டு.
வரிச் சலுகை அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில், டிவிடெண்ட் மற்றும் மூன்றாண்டு கழித்து முதலீட்டை திரும்ப எடுக்கும்போது ஆதாயத்துக்கு வரி எதுவும் கட்டவேண்டி இருக்காது.
45 வயதுக்கு மேல்..!
பொதுவாக 45 வயதிற்கு மேல் வரிச் சலுகைக்காகச் செய்யப்படும் முதலீடுகளை திரும்ப எடுக்கும் காலம்  மூன்று முதல் ஐந்தாண்டுக்குள் எடுப்பதுபோல் பார்த்துக்கொண்டால் நல்லது. மேலும், வரிச் சலுகைக்காக ஆரம்பிக்கும் எந்த விஷயமும் இந்தக் காலகெடுவுக்குள் முடியும்படி பார்த்துக்கொள்வது நல்லது. அந்த வகையில்
15, 20 ஆண்டுகள் இ.எம்.ஐ. கட்டும் வீட்டுக் கடனை இந்த வயதில் வாங்குவது நல்லதல்ல.
வரிச் சேமிப்புக்காக வாலன்டரி பி.எஃப்., ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (வட்டிக்கு வரி உண்டு) என்பதுபோன்ற ரிஸ்க் இல்லாதத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தக் காலகட்டத்தில் செய்யப்படும் வரிச் சேமிப்பு முதலீடு ஓய்வுக்காலத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகவும் அமைய வேண்டும். அதிக 'ரிஸ்க்’ இல்லாமல் இருக்கக்கூடிய முதலீடுகளில் ஈடுபடுவது மிக, மிக முக்கியம்.
இந்தக் காலகட்டத்தில் வரிச் சேமிப்புக்காக பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களை தவிர்ப்பது நல்லது. ரிஸ்க் கொண்ட பங்குச் சந்தை சார்ந்த திட்டத்தின் மூலம் பண அளவில் அல்லது மன அளவில் அதிகம் பாதித்து உடல் நலனை கெடுத்துக்கொள்ள வேண்டாம். இது பல தருணங்களில் கண்ட உண்மை.
வரிச் சலுகைக்காகச் செய்யப்படும் முதலீடு என்றாலும் பாதுகாப்பாக உங்கள் வயதுக்கு ஏற்றதைத் தேர்வு செய்யுங்கள்..!
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வரிச் சலுகைகள் யாவும் தற்போது அமலில் இருக்கும் வருமான வரிச் சட்டத்தின் படியாகும். இதுவே புதிய வடிவத்தில் வெளிவர இருக்கும் நேரடி வரி சட்டத்தில் (Direct Tax Code) பல மாற்றங்கள் இருக்கலாம்.

No comments:

Post a comment